கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் எத்தனை பேர் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில் தாக்கல் செய்த மனுவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா, குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்தரன் ஆகியோரை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு எம்.எல்.ஏக்களின் வாக்குமூலம் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. சுயவிருப்பத்தின் பேரில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாவும் இருக்கிறோம் என எம்.எல்.ஏக்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
எனினும், காவல்துறையினரின் பதில் மனுவில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அரசு தரப்பில் ஆஜரன வழக்கறிஞர் நீதிமன்றம் உத்தரவிட்டால், 119 எம்.எல்.ஏக்களை ஆஜர்ப்படுத்த அரசு தயார் என தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.