தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டு, இப்போதும் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் பெற்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. அது பற்றி இங்கு பார்க்கலாம்.
துரைமுருகன் - விஸ்வநாதன் - ஜெயக்குமார் - விஜயபாஸ்கர்
துரைமுருகன் - விஸ்வநாதன் - ஜெயக்குமார் - விஜயபாஸ்கர்File image

2023 - ல்

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்ற வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் பி.விஜயகுமார் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

2021 ல்...

* விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் தொடர்ந்த வழக்கில், விஜயபாஸ்கர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனு ஏற்க மறுக்கப்பட்டுவிட்டது. இதனால் வழக்கு நிலுவையில் உள்ளது

* புதுச்சேரியில் உள்ள நிரவி - டி.ஆர்.பட்டிணம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் பெற்ற வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் மனோகரன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நாக தியாகராஜன் தாக்கல் செய்த நிராகரிப்பு மனு ஏற்க மறுக்கப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது

* ஈரோடு பெருந்துறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் நிராகரிப்பு மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்ததால் வழக்கு நிலுவையில் உள்ளது.

* சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி வெற்றியை எதிர்த்து வாக்காளர் பிரேமலதா என்பவர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

* திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தொடர்ந்த தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது

* வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு தாக்கல் செய்த தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.

2019 -ல்...

* சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றதை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் பிரவீணா தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

2016 - ல்...

* ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் மீண்டும் எண்ணுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com