நொடிப் பொழுதில் சுதாரித்த மாணவி.. தீயிலிருந்து தப்பித்தது எப்படி..?
காட்டுத் தீயில் இருந்து தப்பித்தது எப்படி என மாணவி ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்றவர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதவிர பலர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருசிலருக்கு லேசான தீக்காயங்கள் தவிர எந்த பிரச்னையும் இல்லை. அப்பிடித்த தீவிபத்தில் இருந்து தப்பிய ஒருவர்தான் சென்னையை சேர்ந்த கல்லூ மாணவி சஹானா.
விபத்தில் இருந்து தப்பித்தது எப்படி என அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ மதியம் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக காற்றும் வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. அதனால் எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆளுக்கு ஒரு பக்கம் ஓடினோம். காட்டுத் தீயில் சிக்கினால் விளைவு கடுமையாக இருக்கும் என்பதை நொடிப் பொழுதில் உணர்ந்தேன். அதனால் நானும் என் தோழியும் மனதை திடப்படுத்திக் கொண்டு அருகில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் குதித்தோம். எங்களை பார்த்து வேறு சிலரும் அந்த பள்ளத்தில் குதித்தனர். அதனால் எங்களுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் ஊர் பொதுமக்கள், வனத்துறையினர் என அனைவரும் வந்து எங்களை மீட்டனர். எங்களுடன் வந்தவர்களில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். அது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது”எனத் தெரிவித்தார்.