1973ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றிபெற்றார். இதுதான் அக்கட்சி பெற்ற முதல் வெற்றி.
அதிமுக உருவான பின் முதல் பேரவைத் தேர்தல் 1977இல் நடைபெற்றது. முதல் முறையாக களமிறங்கிய தேர்தலிலேயே ஆட்சியை கைப்பற்றிய அக்கட்சி 1989 வரை தொடர்ச்சியாக அதிகார பீடத்தில் கோலோச்சியது.
பின்னர் 1991- 1996 வரையும் 2001 -2006 வரையும் 2011 - 2021 வரையும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது. அதாவது முதல் பேரவைத் தேர்தலை சந்தித்த 1977 முதல் இதுவரை 47 ஆண்டுகளில் தமிழகத்தை அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளது.
அதிமுக உருவான பின் நடைபெற்ற 12 மக்களவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களில் அதிமுக இடம் பெற்றிருந்த கூட்டணியே அதிக இடங்களை வென்றிருந்தது.
குறிப்பாக, 2014இல் அதிமுக தனித்துப்போட்டியிட்டு சுமார் 45% வாக்குகளை பெற்றது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி இவ்வளவு அதிக சதவீத வாக்குகள் வாங்கியது அதுவே முதல்முறை.
ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின் கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக தேர்தல் அரசியலில் சறுக்கியே வந்துள்ளது.
2017இல் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது.
2019 மக்களவைத் தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த அதிமுக அதே ஆண்டில் 22 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் திமுகவை விட குறைந்த இடங்களையேப் பெற்றது.
2021ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தொடர்ச்சியான 10 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து நடந்த ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுகவுக்கு தோல்வியே கிடைத்தது.
2023இல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்தது. இப்படி தொடர் தோல்விகள்...
கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களவைத் தேர்தல் என்ற அக்னி பரீட்சையை சந்தித்துள்ளது அதிமுக. வரும் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதை காட்டும் ஒளி விளக்காக அமையுமா...இன்று தெரியும்...