“ஒய்வுபெற்ற ராஜேந்திரன் எப்படி டிஜிபி ஆக இருக்கிறார்?” - உள்துறை அமைச்சகம் கேள்வி
ஒய்வுபெற்ற அதிகாரி எப்படி தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபியாக இருக்கமுடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்விற்கு ஒப்புதல் பெற மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பியிருந்தது.
இந்நிலையில் இந்த அறிக்கை சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் டிஜிபி ராஜேந்திரன் 15, ஜூன் 1957-ல் பிறந்திருக்கிறார். அதன்படி பார்த்தால் அவருக்கு பணி நீட்டிப்பு கொடுத்திருந்தாலும் ராஜேந்திரன் 30, ஜூன் 2017 அன்றே ஒய்வு பெற்றிருக்கவேண்டும். ஆனால் அவர் இன்னும் எவ்வாறு தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபியாக பணியாற்றுகிறார் என்றும், அவரின் ஒய்வுபெறும் தேதி எவ்வாறு 30, ஜூன் 2019 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் வினவியுள்ளது.
அத்துடன் தமிழ்நாட்டில் தற்போது மொத்தமாக 229 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். ஆனால் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பட்டியலில் எப்படி 230 அதிகாரிகள் உள்ளனர் என்ற கேள்வியையும் உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ளது. அத்துடன் தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு என்று பிரத்யேகமாக இருக்கும் பதவிகள் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் ஏன் இன்னும் காலியாக உள்ளது என்ற கேள்வியையும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
ஏனென்றால் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி விதிகள் 4(2) மற்றும் 10ன் படி 2 வருடங்களுக்கு மேல் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் பதவிக்கான பணியில் இல்லை என்றால் அதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும். இந்த விதிமுறையையும் தமிழ்நாடு அரசு ஏன் மீறியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.