
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நாளை மறுநாள் முடிவடைகிறது. இந்நிலையில் பான் கார்டுன் ஆதாரை இணைப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.
வருமானக் கணக்கு தாக்கலுக்கான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30-ஆம் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கான கெடு நாளை மறுநாள் முடிவடையவுள்ளது.
ஏற்கெனவே காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் தரப்படாது என மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, நாளை மறு நாளுக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கத் தவறுவோரின் பான் கார்டு பயனற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் புதிதாக பான் கார்டு விண்ணப்பித்துப் பெற நேரிடும் நிலையில், ஆதார் எண் அப்போது விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டியிருக்கும்.
ஆன்லைனின் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எளிது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா..?
1. வருமான வரித் துறை இணைய தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும் (https://www.incometaxindiaefiling.gov.in/home)
2. அதன் இடதுபுறத்தில் உள்ள Link Aadhaar என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.
3. இப்போது உங்களுக்கு புதிதாக ஒரு பக்கம் திறக்கப்பட்டிருக்கும்.
4. அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் கட்டத்தில் உங்களது பான் எண்ணை நிரப்ப வேண்டும். இரண்டாவது கட்டத்தில் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.
5. மூன்றாவது கட்டத்தில் ஆதாரில் உங்களது பெயர் எப்படியிருக்கிதோ அதனை அப்படியே எழுத வேண்டும்.
6.கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சா கோடை (captacha code) நிரப்ப வேண்டும்
7. பார்வையற்றவர்களின் வசதிக்காக கேப்சா கோடிற்கு பதிலாக ஒன் டைம் பாஸ்வேர்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கேப்சா கோடை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஒன் டைம் பாஸ்வேர்டு வசதியை பயன்படுத்தலாம்'
8. இதனை நிரப்பிட்டு லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தினால் உங்களது ஆதார் பான் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும்.