அண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..!
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட தொடங்கி 15 நாட்களே ஆன நிறுவனத்துக்கு, அண்ணா பல்கலைகழகம் 62 கோடி ரூபாய் ஒப்பந்தம் அளித்தது தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறு மதிப்பீடு விவகாரம் பூதாகரமாகி இருக்கும் நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடுவதற்கு வழங்கும் ஒப்பந்தத்திலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் துணைவேந்தர் இல்லாத போது அமைக்கப்பட்ட, பல்கலைகழக துணை வேந்தர் குழுவின் தலைவரும், தற்போதைய உயர்கல்விதுறை செயலாளருமான சுனில் பாலிவால் 6 பக்கங்கள் கொண்ட புகாரை, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் அளித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமா, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மதிப்பெண் மற்றும் பிற சான்றிதழ்களை அச்சிடுவதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளார். இதில் குறிப்பிட்ட தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளி அனுப்பாத, நிறுவனம் தொடங்கி 15 நாட்களே ஆன IFF என்ற நிறுவனத்துக்கு 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 62 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு ஆண்டுக்கு 2 லட்சம் சான்றிதழ்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 20 லட்சம் சான்றிதழ்களை அச்சடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருப்பதை கண்டறிந்த அப்போதைய பல்கலைக்கழக துணை வேந்தர் குழுவின் தலைவர் சுனில் பாலிவால், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைவில் வழக்குப்பதிவு செய்வார்கள் என சொல்லப்படுகிறது.