வாடகைக்கு வீடு கேட்பதுபோல் மூதாட்டி கொலை - நகைகள் திருட்டு
கோவையில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல நடித்து, மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியை அடுத்த அன்னை வேளாங்கண்ணி நகரில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து வந்தார். இரவு நேரத்தில், ஒரு ஆண் மற்றும் பெண் என இருவர் அவரது வீட்டிற்கு வந்து வீடு வாடகைக்கு உள்ளதா ? என்பதை கேட்டு உள்ளனர். அத்துடன் வீட்டை திறந்து காட்டுமாறு அழைத்துச்சென்றுள்ளனர்.
பிறகு திடீரென அவரை தாக்கி அவர் அணிந்து இருந்த ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர். பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். அருகில் இருந்தவர்கள் சில மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது, கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மேரி ஏஞ்சலின் கிடந்து உள்ளார். உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.