சென்னையில் 22-ஆம் தேதி ஹோட்டல்கள் அடைப்பு; தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்
பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வரும் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேற்று இரவு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து வருகிறது.
ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும். வரும் சில வாரங்கள் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிர்ப்பில் மெத்தனமாக இருக்கக்கூடாது. கொரோனா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு.
கொரோனா வைரஸை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை. மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்த அளவிற்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது முக்கியம். வரும் 22-ஆம் தேதி அன்று அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர, மற்ற யாரும் வெளியில் வர வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வரும் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 22-ஆம் தேதி அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.