ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி ஹோட்டல் ஸ்ட்ரைக்
ஹோட்டல் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பைக் குறைக்க வலியுறுத்தி வரும் 30 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஹோட்டல்கள், பேக்கரிகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் டி.சீனிவாசன் கூறுகையில், “தற்போது சாதாரண ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு 2 சதவீத வாட் வரியும், ஏ.சி. வசதி உள்ள ஹோட்டல்களில் 2 சதவீத வாட் வரி மற்றும் 6 சதவீத சேவை வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள ஹோட்டல்களுக்கு 5 சதவீதமும், 50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள ஹோட்டல்களுக்கு 12 சதவீதமும், ஏ.சி. வசதி உள்ள ஹோட்டல்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கேட்டரிங் சேவைகளுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை பெரிதும் உயரும். ஏற்கெனவே காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஹோட்டல் தொழில் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இந்த நிலையை மேலும் சிக்கலாக்கும். எனவே, சாதாரண ஹோட்டல்களுக்கு 2 முதல் 5 சதவீதமும், ஏ.சி. வசதி உள்ள ஹோட்டல்களுக்கு அதிகபட்சமாக 10 சதவீதமும் மட்டுமே வரி விதிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 30 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஹோட்டல்களை அடைத்து போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்டவை 24 மணி நேரம் மூடப்படும். இதனால் ரூ.500 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்படும்” என்றார்.