ஓசூர் | வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்த இளைஞர் - போலீசார் விசாரணை
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் சாணசந்திரம், வஉசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (29). எலக்ட்ரீசியன் தொழில் செய்து வரும் இவர் தனது நண்பர்களான ஹரிஷ், முனிராஜ், குமார் ஆகியோருடன் சூளகிரி அருகே கோபசந்தரம் பகுதியில் மது அருந்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து முனிராஜ், குமார் ஆகிய இருவரும் வீட்டிற்குச் சென்று விட்ட நிலையில், மனோகர் மற்றும் ஹரிஷ் ஆகிய இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் கசவகட்டா பகுதிக்குச் சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில மணி நேரத்தில், கசவகட்டா பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கு அருகே உள்ள புதரில் இளைஞர் ஒருவர் தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த இளைஞர் சடலமாக இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் சாணசந்திரம் பகுதியைச் மனோகர் என்பது தெரியவந்தது.
அவரது சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அதை அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் கொலையாளியை தேடி வருகின்றனர்.