ஓசூர்: நெடுஞ்சாலையில் சாகச பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள்... வாகன ஓட்டிகள் அச்சம்!
ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாகச பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள். இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை சாகசமாக இயக்கும் இளைஞர்களை கைது செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒசூர் முதல் பேரண்டப்பள்ளி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவது மட்டுமின்றி முன் சக்கரத்தை (வீலிங்) தூக்கியபடி வாகனங்களுக்கு இடையூறாக சாலைகளில் வட்டமிட்டவாறு சாகச பயணமாக நினைத்து ஓட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சாலையில் செல்லும் மற்ற பயணிகளை இடிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டும் இவர்களால் சரியாக ஓட்டுபவர்களும் விபத்துக்குள்ளாவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள் சிலர். ஒசூர் - பேரண்டப்பள்ளி சாலையில் ஏற்படும் விபத்துக்களில் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று இளைஞர்கள் வீலிங் செய்து சென்றபோது இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இதில், இளைஞர்களுக்கு கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் இரத்த காயம் ஏற்பட்ட பின்பும் இளைஞர்கள் மீண்டும் வீலிங் செய்தவாரே சென்றனர்.
இதுபோன்ற சமூக பொறுப்பற்ற இளைஞர்களால் சாலையில் சரியான முறையில் செல்வோர்கூட விபத்தில் சிக்கும் நிலை உள்ளதால் போலீசார் இதுபோன்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

