120 அடி தேர் சாய்ந்து விபத்து: அதிர்ந்துபோன பக்தர்கள்!
ஓசூர் அருகே 120 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் தாலுகா உள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்டது உஸ்கூர் கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற மத்தூரம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதில் உஸ்கூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தேர்களில் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்படும். வயல்வெளிகள், ரெயில்வே தண்டவாள பாதைகள் வழியாக இந்த தேர் கொண்டு வரப்படுவது வழக்கம். இதற்காக தண்டவாளத்தில் சிறிது நேரம் மண் கெட்டி, தேர் செல்ல பாதை அமைக்கப்படும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தேர்த்திருவிழாவிற்காக, நாராயணகட்டா என்ற கிராமத்தில் இருந்து 120 அடி உயரம் கொண்ட தேர் கொண்டுவரப்பட்டது. மாடுகள் தேரை இழுத்து வர, பக்தர்கள் தேரின் முன்புறமும், பக்கவாட்டிலும் நடந்து வந்தனர். இன்று மாலை அந்த தேர் முட்டநல்லூரு என்னும் இடம் அருகில் வந்த போது நிலைதடுமாறி சாய்ந்தது. தேர் சாய்வதை கண்ட பக்தர்கள் அங்கிருந்து அலறி அடித்தபடி ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக தேர் நேராக சாயாமல், விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பங்கள் மீது சாய்ந்தது. இதனால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உயிர் பிழைத்தனர்.