அச்சத்தை ஏற்படுத்தும் அரசு மருத்துவமனை

அச்சத்தை ஏற்படுத்தும் அரசு மருத்துவமனை

அச்சத்தை ஏற்படுத்தும் அரசு மருத்துவமனை
Published on

அடிப்படை வசதியின்மை, மருத்துவர்கள் பற்றாக்குறை, பிரசவத்திற்கு பணம் கேட்கும் பழக்கம் என நாகை அரசு மருத்துவமனை மீது அப்பகுதி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களையும் மருத்துவமனை நிர்வாகம் அச்சுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

வெளித்தோற்றத்தில் பளபளத்துக் காணப்பட்டாலும் பல்வேறு மோசமான நடவடிக்கையின் முன் உதாரணமாக காட்சியளிக்கிறது நாகை அரசு மருத்துவமனை. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், வேட்டைக்காரன் இருப்பு, திருப்பூண்டி, திருமருகல் என நாகை மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இடம் நாகை அரசு மருத்துவமனை. இங்கு சிகிச்சைக்காக வரும் மக்கள் நொந்து கொள்ளும் அளவிற்கு அடிப்படை வசதியின்றி காணப்படுகிறது. மருத்துவமனையின் வளாகத்திற்கு உள்ளேயே மனிதக் கழிவுகள் கொட்டப்படுவதும், அதனை எடுத்துச் செல்லும் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை கூட அளிக்கப்படாத அவலமும் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தாகத்தில் தவிக்கும் நோயாளிகளுக்கு குடிநீர் கூட வைக்கப்படவில்லை என்பது வேதனையின் உச்சம். அத்துடன், பிரசவத்திற்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களிடம், ஆண் குழந்தை பிறந்தால் ஆயிரத்து 500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் ஆயிரம் ரூபாயும் லஞ்சமாக வழங்க வேண்டும் என்பது எழுதாத சட்டமாக நடைமுறையில் உள்ளதாக புகார் கூறப்படுகிறது.

நாகை அரசு மருத்துவமனையில் நிலவும் அவலம் குறித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இது தொடர்பாக, ஊழியர்களை அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களின் வாகனங்களை கீழே தள்ளிவிட்டும் வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் அவர்கள் மீது வாய்மொழியாக புகாரும் அளித்துள்ளனர். நாகை அரசு மருத்துவமனையில் நிலவும் அவலங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com