வேறு மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணியை அனுமதிக்க மறுப்பு: சர்ச்சையில் காஞ்சி மருத்துவமனை
வேறு மாவட்டத்தில் இருந்தது பிரசவத்திற்காக வந்த பெண்ணை காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண் பிரசவ வலியுடன் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டதன் பேரில், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சரஸ்வதியின் சகோதரர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதால் காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்க சரஸ்வதி கொண்டு வரப்பட்டார். ஆனால், வேறுமாவட்டத்தைச் சேர்ந்தவரை சிகிச்சைக்கு அனுமதிக்க காஞ்சி அரசு மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு சரஸ்வதி அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், பிரசவ வலியுடன் வந்த பெண்ணை அனுமதிக்காதது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குநர் கூறியுள்ளார்.