பணத்தை தவறவிட்டவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
சென்னையில், பயணி தவறவிட்ட பணம் மற்றும் ஆவணங்களை காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை சாமியார் தோட்டத்தை சேர்ந்த முத்துராஜ் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று சிலரை ஏற்றிச் சென்று ஆயிரம் விளக்கு பகுதியில் இறக்கிவிட்டார். பிறகு தனது வீட்டிற்கு திரும்பிய அவர், தனது ஆட்டோவில் 14 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் பை ஒன்று இருந்ததை பார்த்தார். உடனே அந்த பையை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பணத்தை தொலைத்தவர் யார் என்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு பணத்தை தொலைத்த சுமன் ஹெலா என்ற பெண் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜ் மூலம் உறுதி செய்யப்பட்டு, பணமும், ஆவணங்களும் அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. முத்துராஜின் நேர்மையை காவல்துறை அதிகாரிகளும், சக ஆட்டோ ஓட்டுநர்களும் வெகுவாகப் பாராட்டினர்.