2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது என்ற என்.சி.இ.ஆர்.டியின் விதிகளை பின்பற்ற சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, புருஷோத்தமன் என்ற வழக்கறிஞர் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், சிபிஎஸ்இ பாடத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்பான விசாரணையின்போது, மத்திய அரசு, சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டியும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடாது என பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஆரம்பக் கல்வியில் 2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு மொழி மற்றும் கணிதம் என இரண்டு பாடங்களையே போதிக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மூன்று முதல் 5ஆம் வகுப்பு வரை வாரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மொழி, சூழ்நிலையியல் மற்றும் கணிதம் என மூன்று பாடங்கள் மட்டுமே போதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, என்.சி.இ.ஆர்.டியின் விதிகள் பின்பற்றப்படுகிறதா என சிபிஎஸ்இ கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்றும் மாநில பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளும் இதனை பின்பற்றலாம் எனவும் நீதிபதி பரிந்துரைத்தார்.