தொடர் விடுமுறை: குதூகலத்தில் குடும்பங்கள் - சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தொடர் விடுமுறை: குதூகலத்தில் குடும்பங்கள் - சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தொடர் விடுமுறை: குதூகலத்தில் குடும்பங்கள் - சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஆழியார், ஒகேனக்கல், கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களில் குவிந்துள்ள பொதுமக்கள் விடுமுறையை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

குரங்கு அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்:

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, ஆழியார் பூங்கா, கவியருவி மற்றும் வால்பாறை, டாப்சிலிப் ஆகிய பகுதிகள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த பகுதிகளாகும்.

இங்கு சனி, ,ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஆழியார் அணை மற்றும் குரங்கு அருவியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குடும்பம் சகிதமாக ஆரவாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் நிரம்பி வழிந்ததால் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களை அருவியில் எச்சரிக்கையுடன் குளிக்குமாறு அறிவுறுத்தினர்.

ஒகேனக்கல்லில் பரவச பரிசல் பயணம்:

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை பொழிவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 6,000 கனஅடியாக நீர்வரத்து இருந்து வருகிறது. இந்த நிலையில கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள், பரிசலில் ஐந்தருவி பகுதிக்குச் சென்று செல்பி எடுத்து, ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர்.

மேலும் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்தனர். விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், சுற்றுலா தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் குளிரை அனுபவிக்க குவியும் சுற்றுலா பயணிகள்:

கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையை மகிழ்ச்சியோடு கொண்டாட மலைகளின் இளவரசி கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதலே மலைப்பகுதிக்கு படையெடுத்த பயணிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று மலைப்பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலில் ரம்மியமாக காட்சியளிக்கும் மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் தூண்பாறை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் ஒய்யார குதிரை ஏற்றம் செய்தும் பயணிகள் மலைப்பகுதியின் காலநிலையையும், இயற்கை அழகையும் ரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com