“கனிம வளங்கள் கொள்ளையை இரும்புக் கரத்தால் ஒடுக்குக” - உயர்நீதிமன்றம்

“கனிம வளங்கள் கொள்ளையை இரும்புக் கரத்தால் ஒடுக்குக” - உயர்நீதிமன்றம்
“கனிம வளங்கள் கொள்ளையை இரும்புக் கரத்தால் ஒடுக்குக” - உயர்நீதிமன்றம்

இயற்கை மற்றும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சட்டவிரோதமாக கருங்கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, சுப்பாரெட்டி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டதாக குறிப்பிட்ட நீதிபதி, சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக எவ்வித கருணையும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

மேலும், சமூகத்தில் செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கனிம வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழல்‌ பாதிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். இயற்கை வளங்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 6 வாரத்தில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். அத்துடன் சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ‌என விழுப்பு‌ரம் மாவட்ட ஆட்சியருக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

அதேவேளையில் ‌இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்பாரெட்டி விளக்கம் அளிக்க வேண்டும், விளக்கத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சட்டப்படி முடிவெடுக்கலாம் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து சுப்பாரெட்டி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம், வழக்கின் உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பாக 6 வாரத்திற்கு பின்னர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com