“தனி அறையில் சிகிச்சையளிப்பது பயமாக இருக்கிறது” - கர்ப்பிணி கணவர்
தங்களுக்கு உரிய பாதுகாப்பும், மருத்துவ சிகிச்சை குறித்த விவரமும் தெரிவிக்க வேண்டும் என எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் கணவர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் சாத்தூரைச் சேர்ந்தர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் முதல் தளத்தில் வைத்து, தனி அறையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் “இரத்தம் வழங்கிய இளைஞர் இறந்தது, எங்களை மிகுவும் வேதனையடைய செய்துள்ளது. எங்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இரவு நேரங்களில் எங்களுக்கு அச்சமாக உள்ளது.
மேலும் எங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பகுதியில் போதிய பாதுகாவலர்கள் இல்லாததால் மிகுந்த அச்சத்துடனே சிகிச்சை எடுத்து வருகின்றோம். அதேபோல் மருத்துவர்கள் அளித்து வரும் சிகிச்சை குறித்து எந்தத் தகவலும் எங்களுக்கு தெரிவிக்காமலே சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் விருதுநகர் மருத்துவமனையில் எந்த மாதிரியான சிகிச்சை பெற்று வந்தோமோ அதேபோலதான் உணர்கின்றோம்” என்றார். மேலும் அவர் தங்களுக்கு உயரிய சிகிச்சையும், சிகிச்சை விவரம் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிதுள்ளார்.