புனித ஜார்ஜ் கோட்டையும், தமிழ்நாடு சட்டப்பேரவையும் - சுவாரஸ்ய தொகுப்பு

புனித ஜார்ஜ் கோட்டையும், தமிழ்நாடு சட்டப்பேரவையும் - சுவாரஸ்ய தொகுப்பு
புனித ஜார்ஜ் கோட்டையும், தமிழ்நாடு சட்டப்பேரவையும் - சுவாரஸ்ய தொகுப்பு

வரலாறுகளை காலம் தன்போக்கில் எழுதிச்செல்லும்போது, அதற்கான சாட்சியங்களையும் விட்டுச்செல்கிறது. தமிழ்நாடு சட்டமன்றம் அதன் நூற்றாண்டை கொண்டாடும் இந்நேரத்தில் பேரவை இயங்கும் புனித ஜார்ஜ் கோட்டை குறித்து பார்ப்போம்.

புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றை அறிய 1600 ஆம் ஆண்டுகளுக்கு நாம் செல்ல வேண்டியிருக்கிறது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது வணிகத்துக்கு ஏற்ற இடம் தேடியபோது அதற்கான பொறுப்பை பிரான்சிஸ் டே- இடம் ஒப்படைத்தது. அப்போது அப்பகுதியின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர் வேங்கடப்பர். அவரிடம் பேசி ஒப்பந்தமிட்டு சாந்தோமிற்கு அருகே 1639 -ல் இடம் வாங்கப்பட்டது. தங்கள் வணிக நோக்கத்துக்காக ஆங்கிலேயேர் கட்டிய கட்டடமே புனித ஜார்ஜ் கோட்டை. 1640 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் நாளில் இந்த கோட்டையின் ஒருபகுதி கட்டி முடிக்கப்பட்டதால் இது புனித ஜார்ஜ் கோட்டை என்றழைக்கப்படுகிறது.

1640 முதல் 1643 வரை கோகன் என்ற ஆங்கில அதிகாரியும், 1643-44 ஆம் ஆண்டுகளில் பிரான்சிஸ் டேவும் இந்த கோட்டையில் இருந்து நிர்வாகம் செய்தனர். 1678ல் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் புனித மேரி தேவாலயம் கட்டப்பட்டது. இங்குதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படக் காரணமான ராபர்ட் கிளைவின் திருமணம் 1753ல் நடைபெற்றது.

1700 முதல் 1774 வரை புனித ஜார்ஜ் கோட்டைதான் ஆங்கிலேயரின் தலைமையிடமாக இருந்தது. அதன் பின்னர்தான் கல்கத்தாவுக்கு மாறியது. 107.50 ஏக்கர் பரப்பிலான இந்த கோட்டையில்தான் தமிழ்நாடு சட்டமன்றம் இயங்குகிறது. தமிழக சட்டமன்றம் கோட்டையில் மட்டுமின்றி வெவ்வேறு இடங்களில் இயங்கிய வரலாறும் உண்டு. சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் மண்டபத்தில் பேரவை கூடியபோது கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்திலேயே மேலவை கூடியது. 1938 முதல் 1939 வரை சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபம் எனப்படும் விருந்தளிக்கப்படும் மண்டபத்தில் பேரவை கூடியது.

சென்னை அரசினர் தோட்டத்தில் சட்டப்பேரவை கட்டடம் 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 1952 முதல் 1956 வரை இங்குதான் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. பின்னர் அந்த இடம் பாலர் அரங்கமாகவும், கலைவாணர் அரங்கமாகவும் அழைக்கப்பட்டது.

1937 ல் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் மண்டபத்தில் சட்டப்பேரவை கூடியது. 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உதகையில் உள்ள அரண்மூர் அரண்மனையில் சட்டமன்றம் கூடியது. கோடைக்காலத்தையொட்டி, மலைப் பிரதேசமான உதகையில் சட்டமன்றம் கூட்டப்பட்டது. அதன்பிறகு கொரோனா கால நெருக்கடி சூழலால் தற்போது கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டங்கள் நடைபெற்றன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com