பாவை நோன்பும் - பஜனைப் பாடலும்! சென்னை மார்கழி இசை விழாவின் வரலாறு!
சென்னையில் மார்கழி இசைவிழா இன்று தொடங்குகிறது. இந்த இசை சீசன் தொடங்கியது எப்படி? இதன் பாரம்பரியம் என்ன?
சென்னையின் அழுத்தமான அடையாளங்களில் ஒன்று, ஒவ்வொரு மார்கழி மாதமும் நடைபெறும் இசைவிழாக்கள். நகரம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் இந்த சீசனைப் போன்ற விழா உலகில் வேறு எந்த நகரத்திலும் நடப்பதில்லை என்ற பெருமை சென்னைக்கு உண்டு. இதை ஐநாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அங்கீகரித்து உலகின் படைப்பாக்க நகரங்களில் ஒன்றாக சென்னையை அறிவித்துள்ளது. தமிழும், இசையும் கலந்து இறைவனை ஆராதிப்பதற்கு உகந்த மாதமாக மார்கழி மாதம் சைவர், வைணவர் இருவராலும் பல நூற்றாண்டுகளாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மார்கழி மாதத்தில்தான் பகவான் கிருஷ்ணரால் அருளப்பட்டது என்பது நம்பிக்கை. மேலும் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுவதாக இடம்பெற்றுள்ளதால், இறை வழிபாட்டிற்காகவே மார்கழியை கடைபிடிப்பது பாரம்பரியம். பெண்கள் பாவை நோன்பு இருப்பதும், ஆண்கள் அதிகாலைகளில் பஜனை எனப்படும் பக்திப் பாடல்களை இசைப்பதிலும் ஈடுபடுவது வழக்கம். குறிப்பாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை ஆகியவை அதிகம் பாடப்படும் இந்த மாதம் இசை மார்கழி என்றே அழைக்கப்படுகிறது.
கோவில்கள் சார்ந்தே முழங்கி வந்த மார்கழி இசையை, நகரம் முழுவதும் நடக்கும் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட இசை விழாவாக மாற்றிய பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும். 1927-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு சென்னையில் நடந்தது. அந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய இசை வடிவங்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் இசை விழா நடத்தப்பட்டது. அந்த விழாதான் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து சென்னை இசை சீசன் என்று உலகப் புகழ்பெற்றது. அது மட்டுமல்ல, அந்த காங்கிரஸ் மாநாட்டு கலை நிகழ்வுகளில் ஒன்றாக, தென்னிந்திய இசை வடிவங்களை அடுத்த தலைமுறைகளுக்கு போதிக்கும் இசைப் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது. அதுதான் இன்றளவும் சென்னையை இசை உலகின் மையமாக உயர்த்திப் பிடித்திருக்கும் மியூசிக் அகாடமி.
ஒரு சில இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட விழாவாக தொடங்கியதுதான், இன்று 25 நாட்களில் 40க்கும் மேற்பட்ட சபாக்களில் கச்சேரிகள் நடக்கும் சென்னை இசை சீசனாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.