“கொரோனாவின் ஹாட்ஸ்பாட் !” - கோயம்பேடு சந்தை வரலாறு என்ன ?
கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதை அடுத்து சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் அதன் வரலாற்றைச் சற்றே தெரிந்து கொள்ளலாம்.
நாளொன்றுக்கு ரூ.35 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தை. சென்னையின் அடையாளங்களில் ஒன்று என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது கோயம்பேடு காய், கனி, மலர் அங்காடி. முன்பு பாரிமுனை அருகே உள்ள கொத்தவால் சாவடிதான் சென்னையின் பெரிய சந்தை. அங்கு இட நெருக்கடி ஏற்பட்டதால் கோயம்பேட்டில் புதிய அங்காடி உருவாக்கப்பட்டு 1996-ல் திறக்கப்பட்டது.
295 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் கோயம்பேடு சந்தையில் 3 ஆயிரத்து 941 கடைகள் உள்ளன. இரண்டு பிளாக்குகளில் காய்கறியும், ஒரு பிளாக்கில் கனி மற்றும் மலர்களும் விற்பனை செய்யப்பட்டன. ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்லும் இடம் கோயம்பேடு அங்காடி. நாளொன்றுக்கு சுமார்10 ஆயிரம் இருசக்கர வாகனங்களும், 4 ஆயிரம் சிறிய ரக சரக்கு வாகனங்களும் கோயம்பேடுக்கு வருகின்றன.
சாதாரண நாள்களில் 5 ஆயிரம் முதல் 5 ஆயிரத்து 500 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்காக கோயம்பேடுக்குக் கொண்டு வரப்படும். பொது முடக்கத்துக்கு முன்பு நாளொன்றுக்கு 30 முதல் 35 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பொது மக்களும் கோயம்பேடுக்கு வந்து தேவையானவற்றை வாங்கிச் செல்வர்.
அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் கிளம்பும் மளிகைக் கடைக்காரர் சிறிது நேரம் கழித்து காய்கறிகளுடன் வந்து சேரும் காட்சியை பெரும்பாலான சென்னை வாசிகள் கண்டிருப்பர். இப்படி ஆயிரக்கணக்கானோரின் வருவாய் ஆதாரமாகத் திகழ்ந்த கோயம்பேடு சந்தையை முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா தொற்று.