1817 முதல் 2023 வரை.. இந்து சமய அறநிலையத்துறை உருவானது எப்படி? இருநூற்றாண்டு வரலாறு!

1817 முதல் 2023 வரை.. இந்து சமய அறநிலையத்துறை உருவானது எப்படி? இருநூற்றாண்டு வரலாறு!
1817 முதல் 2023 வரை.. இந்து சமய அறநிலையத்துறை உருவானது எப்படி? இருநூற்றாண்டு வரலாறு!
Published on

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து முழு விபரங்களையும் இங்கு அறிந்துகொள்வோம்.

இந்து சமய அறநிலையத்துறையும் நடப்பு சர்ச்சைகளும்

தமிழ்நாட்டில் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்கக் கோரியும், அரசின் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்தும் தமிழக பாஜகவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாவட்டத் தலைவர்கள் மற்றும் எச். ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அண்ணாமலை அளித்த பேட்டி!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு துறையாக இந்து சமய அறநிலையத் துறை இருக்கிறது. தமிழக கோயில்களிலிருந்து ரூ.1,000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். ஆனால், அதனை மறைத்து தமிழக அரசு வெறும் ரூ.100 கோடி அளவில்தான் கணக்கு காட்டுகிறது. இதற்கு ஒரே முடிவு கோயில்களின் நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேற வேண்டும். பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்பது எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது.

அமைச்சர் சேகர்பாபு பதிலடி

இதற்குப் பதிலளித்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “அறநிலையத்துறை உருவாகி 63 ஆண்டுகள் ஆகி விட்டது. கோவிலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் யாரிடம் கொடுப்பது? டெண்டரா விட முடியும்? அவரது பார்வையில் அறநிலையத் துறை தேவையற்ற ஆணியாக தெரிகிறது. ஆட்சிக்கு வந்ததும் பிடுங்கிப் போடப் போகிறாராம். அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அப்புறம் சித்தப்பா என்று பெயர் வைக்கலாம். தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வரலாம் என்று நினைப்பது பகல் கனவு... கானல் நீர்... கனவில் கூட நடக்காது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லி அசிங்கப்படுவதை அண்ணாமலை தவிர்க்க வேண்டும். இது மல்லாந்து படுத்தப்படி காறி உமிழ்வதற்கு சமமானது” எனப் பதிலளித்திருந்தார்.

கோயில் சொத்துகளில் முறைகேடு

அரசியல் உலகில் இவ்விவாதம் பெரும் பரபரப்பாகி இருக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உருவானது குறித்தும், அதன் சிறப்புகள், திட்டங்கள், தற்போதைய நிலை குறித்தும் இங்கு அறிவோம். வரலாற்றுப் பெட்டகங்களாக நிலைபெற்றிருக்கும் திருக்கோயில்களின் பண்பாட்டு அசைவுகளைக் காக்கும் பொருட்டு, இத்துறை ஏற்படுத்தப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இருந்தே தமிழக கோயில்கள் அரசின் ஆளுகையின்கீழ் இருந்ததாக வரலாறுகள் பதிவு செய்கின்றன. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் இருந்தே திருக்கோயில்களுக்கு என வழங்கப்பட்ட நிலம் மற்றும் சொத்துகளில் நிர்வாக ரீதியாகப் புகார் எழுந்துள்ளது. அந்தச் சமயத்தில்தான், அதாவது 1817இல் முதல்முறையாக மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம், திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் அறக்கொடைகள் முறையாக செயல்படுகிறதா என கண்காணிக்க வழிவகை செய்தது.

தலையிடாத பிரிட்டிஷ் அரசு

இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தொடங்கி ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் 1858இல் இந்திய நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு நேரடியாகச் சென்றது. அப்போது, 'மதவிவகாரங்களில் பிரிட்டிஷ் அரசு தலையிடாது' என்ற வாக்குறுதியை அளித்ததால், பழையபடி கோயில் சொத்துக்களை அனுபவிக்கத் தொடங்கியதுடன், மீண்டும் நிர்வாகரீதியாகப் புகார் எழுந்தது. ஆனால், அந்தப் புகார்களில் பிரிட்டிஷ் அரசு தலையிடவில்லை. என்றாலும் மக்களிடமிருந்து தொடர்ந்து புகார் சென்றுகொண்டே இருந்தது.

இந்து சமய அறநிலைய வாரியம்

இந்தச் சூழலில்தான் 1920இல் பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். இதற்காக 1922இல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்த அவர், 1925இல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்துக்கான ஒப்புதலையும் பெற்றார். இறுதியில் 1927இல் 'இந்து சமய அறநிலைய வாரியம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அலுவல் சாரா குழு பரிந்துரை

இதன்படி திருக்கோயில்களின் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப்பட்டது. அதைப்போலவே நிர்வாகம் சரிவர நடைபெறாத கோயிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்துசமய அறநிலைய வாரியத்தினை சீர்படுத்தும் பொருட்டு 1940ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு அலுவலரை நியமனம் செய்தது. இதைத் தொடர்ந்து 1942ஆம் ஆண்டு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நியமனம் செய்யப்பட்ட அலுவல் சாரா குழு, ‘இந்து சமயம் மற்றும் அறநிறுவனங்களை வாரியத்திற்குப் பதிலாக அரசே நிர்வகிக்கலாம்’ எனப் பரிந்துரைத்தது. இதனை ஏற்று இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1951 இயற்றப்பட்டு பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அரசுத் துறை உருவாக்கம்

இந்து சமய அறநிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது. இந்த சட்டத்தில் விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1959ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம், 22, ஜனவரி 1960, 1ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன்படி, இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சி பணி (I.A.S.) அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

தற்போது இந்துசமய அறநிலையத் துறை ஆணையராக ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப. பணியாற்றி வருகிறார். அவருக்குக் கீழ் உதவி ஆணையர்களும், அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் துறையின் அமைச்சராக பி.கே.சேகர்பாபு உள்ளார். இத்துறையில், 2,409 அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. தற்போது 1,336 பணியாளர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பணியாளர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மொத்த கோயில்களின் எண்ணிக்கை

இந்தத் துறை கணக்கின்படி (தமிழக அரசின் இணையதளம்), தமிழகத்தில் மொத்தம் 46,022 திருக்கோயில்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பட்டியலிடப்பட்ட திருக்கோயில்களின் எண்ணிக்கை 9,190 என்றும், பட்டியலிடப்படாத திருக்கோயில்களின் எண்ணிக்கை 36,832 எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சமணத் திருக்கோயில்கள் (22), திருமடங்கள் (45), திருமடத்துடன் இணைந்த கோயில்கள் (68), அறக்கட்டளைகள் (1,264), குறிப்பிட்ட அறக்கட்டளைகள் (1,127) ஆகியனவும் அடங்கும். இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 4,78,283.59 ஏக்கர் பரப்பளவுடைய நிலங்கள் உள்ளன. கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை 1,23,729 குத்தகைதாரர்கள் பயிர்செய்து வருகின்றனர்.

4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம்

இந்தத் துறையோடு இணைந்த கல்லூரிகளும், பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 6 கல்லூரிகளும், 48 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும், திருக்கோயில்களின் தொன்மை, வரலாறு, கட்டடக்கலை, கல்வெட்டுச் செய்திகள், வழிபாட்டுச் சிறப்புகள் ஆகியவற்றை மக்கள் அறியும் வண்ணம் தலவரலாறு நூல்களும், திருக்கோயிலையும் திருக்கோயில் அமைந்துள்ள ஊரையும் உள்ளடக்கிய தலபுராண நூல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களின் பதிவேடுகள் 4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள நற்பண்புகள், நீதிநெறி கருத்துக்களை கதைகள் வாயிலாக குழந்தைகளின் மனதில் ஆழப்பதிந்திட, ஆன்மிக மற்றும் நீதிநெறி வகுப்புகள், முக்கிய திருக்கோயில்கள் அனைத்திலும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஒருகால பூஜை திட்டம் 

1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், நிதி வசதியற்று, ஒரு கால பூஜை கூடச் செய்திட இயலாத நிலையில் இருக்கும் கோயில்களுக்கு, நாள்தோறும் ஒரு கால பூஜை செய்திட வழிவகை செய்யப்பட்டது. இதன்மூலம், 12,959 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இசைக்கலைஞர்கள் நியனம்

கோயில்களில் போதிய எண்ணிக்கையில் இசைக்கலைஞர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். நாதஸ்வரம், தவில், தாள இசைவாணர்களை நியமனம் செய்து அவர்களுக்கு முறையே ரூ.1,500, ரூ.1,000 மற்றும் ரூ.750 வீதம் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல், இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படாத திருக்கோயில்களில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து 60 வயதினை நிறைவு செய்து ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியமாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், இதுவரையில் 3,281 கிராமக் கோயில் பூசாரிகள் பயன்பெற்றுள்ளனர். அதுபோல், கிராமத் திருக்கோயில்களில் பூசை செய்யும் பூசாரிகளுக்கு கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

யானைகள் நலவாழ்வு முகாம்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்படுகிறது. இதில், திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த 24 யானைகளும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த திருக்கோயில்களின் 2 யானைகளும் பங்கேற்று பயனடைந்துள்ளன.

நாள் முழுவதும் அன்னதானம் திட்டம்

கோயில்களுக்கு இறையருள் பெற வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில் கடந்த 2002ஆம் ஆண்டு இலவச அன்னதானம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி, மதியவேளை உணவு 754 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் மற்றும் பழநி முருகன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் விரிவுபடுத்தப்பட்டு, திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை

தமிழின் வளர்ச்சிக்கு பங்களிப்பை அளிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ’கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, முதற்கட்டமாக 47 முதுநிலை திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு பதாகையில், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர் மற்றும் அவரது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், தமிழ் அர்ச்சனை நூல்கள் கிடைக்கச் செய்து இவ்வரசு அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்

அடுத்து, கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில், இந்து சமயத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் தகுதியான மற்றும் தேவையான பயிற்சி பெற்றோரை அர்ச்சகர்களாக நியமித்திட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், மதுரை, பழநி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர்ளுக்கான பயிற்சி நிலையங்களும், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு இடங்களில்வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன், 56 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணி புரிந்து வருகின்றனர்.

கோயில் திருப்பணிகள்

கடந்த 12 ஆண்டுகளாக திருப்பணி மேற்கொள்ளாத கோயில்கள், திருப்பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையாமல் உள்ள கோயில்களில் பணிகளை விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி அமைந்த ஓராண்டில் 300 கோயில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

கோயில் நிலங்கள் - சிலைகள் மீட்பு

கடந்த காலங்களில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பதாகவும், சுவாமி சிலைகளைக் கடத்துவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்டெடுப்பது, பழைய கோயில்களை சீரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்துவது, காணாமல் போன கோயில் சிலைகளை மீட்பது என பல முன்னெடுப்புகளை இந்துசமய அறநிலையத் துறை எடுத்து வருகிறது. மேலும் மாநிலத்தில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யும் புது நடைமுறையும் தொடங்கப்பட்டது.

அதன்படி, வாடகைக்கு விடப்பட்டிருக்கும் கோயில் சொத்துக்கள் மூலம் வர வேண்டிய வாடகை பாக்கியும் சுமார் 2,390 கோடி ரூபாயை வசூலிக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுஒருபுறமிருக்க, மறுபுறம், திமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாட்டில் கோயில்களுக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதுபோல், தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சுவாமி சிலைகளில் இதுவரை 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இத்துறை அமைச்சர்கள் பட்டியல்

1971-77 திமுக ஆட்சியில் இத்துறை அமைச்சராக இருந்தவர் மு.கண்ணப்பன். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஆர்.எம்.வீரப்பனும், வி.வி.சுவாமிநாதனும் அமைச்சர்களாக இருந்தனர். அடுத்து 1989- 91 வரையிலான திமுக ஆட்சியில் கே.பி. கந்தசாமி அமைச்சராக இருந்தார். 1991-96 வரையிலான அதிமுக ஆட்சியில் அம்மமுத்துப் பிள்ளை, நடேசன் பால்ராஜ் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். 1996-2001 வரையிலான திமுக ஆட்சியில் தமிழ்க்குடிமகனும், 2001-2006 வரையலான அதிமுக ஆட்சியில் அய்யாறு வாண்டையாரும் பி.சி.ராமசாமியும் அமைச்சர்களாக இருந்தனர். 2006இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் இத்துறை அமைச்சரானார். ஆனால் அவர் அமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, பெரியகருப்பன் அமைச்சரானார்.

2011இல் அதிமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு இத்துறையின் அமைச்சர் பொறுப்பை ஏற்ற எஸ்.பி.சண்முகநாதன் சில மாதங்களில் பதவியை இழந்தார். அவரை அடுத்து இப்பதவிக்கு வந்த பரஞ்சோதியும் அடுத்த சில நாட்களில் பதவியை இழந்தார். 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக அரசில் இத்துறை அமைச்சராக சேவூர் ராமச்சந்திரன் பொறுப்பேற்றார். தற்போது ஆரணி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் இவர் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். மேலும், இவர்களில் மு.கண்ணப்பன், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட பலரும் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ராசியில்லாத துறையா - முணுமுணுப்பை முறியடித்த சேகர்பாபு

ஒருகாலத்தில் இத்துறை ராசியில்லாத துறை என்று சக அரசியல்வாதிகளால் முணுமுணுக்கப்பட்டது. அதற்கு அத்துறையில் பொறுப்பேற்ற அமைச்சர்களின் மரணமும், பதவி பறிப்புகளும் காரணமாகச் சொல்லப்பட்டது. அந்தத் துறையை வகித்த பிறகு, அடுத்து அரசியலில் முன்னேறாமல் போன வரலாறுகளும் உண்டு. அதேநேரத்தில், தற்போது இத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் பி.கே.சேகர்பாபு, இந்துசமய அறநிலையத்துறையில் எண்ணற்ற மாற்றங்களை நிகழ்த்திவருகிறார். அவரது அதிரடியாக நடவடிக்கைகள் பலரையும் வியக்க வைத்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com