மாத்திரைக் கவர்களில் இந்தி மொழி; அவ்வளவு பெரிய குற்றமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!!
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு காக்கி கவரில் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த காக்கி கவரில், மக்கள் எளிதில் புரிந்துகொண்டு மாத்திரையைச் சாப்பிடுவதற்காக காலை, மதியம், இரவு என தமிழில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்தச் சூழலில் நேற்று, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தியில் பிரின்ட் செய்யப்பட்ட கவர்களில் மருந்துகள் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இருமொழி கொள்கைதான் என்று தொடர்ந்து தமிழக அரசு கூறி வரும் நிலையில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பிரின்ட் செய்யப்பட்ட கவரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விமர்சனங்கள் திமுக சார்பில் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், கடந்த டிசம்பர் 2025-இல், அதாவது திமுக ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட கவர்கள் இவை எனவும் தற்போது, இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் தான், இந்த விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாத்திரை கவர்களில் இந்தி மொழி இடம்பெற்றது அவ்வளவு பெரிய குற்றமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”மருத்துவமனையின் வாசலுக்குள்ளும் மொழி அரசியலை இழுத்து வருவது, “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்ற நமது பெருமைக்குரிய அடையாளத்திற்கே களங்கம் ஏற்படுத்தும் செயல்!
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரைக் கவர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அவ்வளவு பெரிய குற்றமா? இது இந்தித் திணிப்பு குறித்த விவாதமே அல்ல. மருந்தை எப்படி உட்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைத் தகவல், அதை வாங்கும் நோயாளிக்குப் புரிய வேண்டும் என்பதுதான் இங்கே முக்கியம்.
காலங்காலமாக மொழியை வைத்து அரசியல் செய்து வரும் திமுக, இதிலும் ஒரு சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கலாம். ஆனால், அதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்ற பெயரில், அவர்களின் அரசியலுக்கே அடிபணியும் வகையில், பயன்பாட்டிலிருந்த மருந்துக் கவர்களை அகற்றுவது, ஒரு பொறுப்புள்ள, மனிதாபிமானமிக்க அரசின் நடவடிக்கையாக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் பிற மாநிலங்களிலிருந்து வந்து வாழ்ந்து, உழைத்து வரும் பல லட்சம் மக்களும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எந்த மொழியைப் பேசுகிறார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கடந்து, அவர்களுக்கும் சரியான மருத்துவத் தகவல், புரியும் வகையில் கிடைக்க வேண்டும். அதுவே அடிப்படை மனிதநேயம். தமிழின் உரிமையைப் பாதுகாப்பதையும், ஒரு நோயாளிக்கு அவர் புரியும் மொழியில் உயிர் காக்கும் தகவலை வழங்குவதையும் ஒன்றுக்கொன்று எதிரான விஷயங்களாக மாற்றுவது அபத்தம்.
ஆக, திமுகவின் மலிவான மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது உள்ளபடியே வேதனை அளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

