தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி.. விளக்கம் தந்த தலைவர்!
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், மொழிகள்வாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, அவ்வப்போது மொழிப் பிரச்னைகள் ஏற்படுவதுடன் அம்மாநிலங்களில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மைய இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா புதிய தலைமுறைக்கு பிரத்யேக விளக்கம் அளித்துள்ளார். அதில், ”சென்னை வானிலை ஆய்வு மைய நாள்தோறும் வழங்கும் அறிக்கையில் இந்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2024 முதல் இது நடைமுறையில் உள்ளது. இந்தியை சென்னை வானிலை ஆய்வு மைய பக்கத்தில் சேர்க்கச் சொல்லி இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவுறுத்தினர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாடாளுமன்றக் குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் ஓர் இந்தி மொழிபெயர்ப்பாளரும் ஜூலை 2023ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இது நடைமுறைக்கு வந்தது” என அவர் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ’டிடி தமிழ்' சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.