"கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது" - உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கப் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் வீடியோ கால் மூலம் விசாரித்தனர்.
கொரேனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள கபசுர குடிநீர் குடிக்குமாறு சித்த மருத்துவர்கள் கருத்து கூறி வருவதாகவும், எனவே வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் மட்டுமின்றி ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை ஆய்வு செய்ய சித்த மருத்துவர் கொண்ட நிபுணர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ள நிலையில், கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென தங்களால் அரசுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசே முடிவெடுக்க வேண்டுமெனத் தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.