ஸ்டெர்லைட் ஆலை மனு தள்ளுபடி : பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 3 தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று 815 பக்க தீர்ப்பை வழங்கினர்.
அதில், ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மேல்முறையீடு செல்லும்வரை தீர்ப்பை நிறுத்திவைக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து தூத்துக்குடியில் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், “வீதிகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. கொண்டாட்டங்கள் அனைத்தும் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.