“டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்ன?” - நீதிமன்றம் கேள்வி
முதல்வர் மீது திமுக அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள 5 டெண்டர்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலைப் பணிகள் தொடர்பாக விடப்பட்டுள்ள டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி தினசரி நடைபெற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல் செய்தனர். அதைப் பிரிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, டெண்டர் ஒதுக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என விசாரணை நடத்தப்பட்டதா என வினவினார். அப்போது, முதல்வர் மீது திமுக கூறிய புகாரில் ஐந்து டெண்டர்களில் 3 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், டெண்டர் விடப்பட்டதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும் எந்த அரசு ஆட்சி செய்தாலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதே முறையிலேயே 281 டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. டெண்டர் ஒதுக்கீடு பணிகளைக் கவனிக்க மூன்று குழுக்கள் உள்ளதாகவும் துறையின் அமைச்சர் என்ற முறையிலேயே முதல்வர் அந்தக் குழுக்களின் தலைவராக உள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், டெண்டர் நடைமுறைகளில் விதிமீறல் இருப்பதாகக் கருதினால் அதை சிவில் வழக்காகத்தான் தொடர முடியும் என்றும் கிரிமினல் வழக்கு தொடர முடியாது எனவும் லஞ்ச ஒழித்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு சிவில் தன்மையாக இருந்தாலும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளதால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகார் கூறப்பட்டுள்ள 5 டெண்டர்களின் நிலை என்ன? என்றும் சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்காகக் காரணங்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.