“நெகிழியை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா?” - உயர்நீதிமன்றம் கேள்வி
நெகிழிக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2019 ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக, கடந்த 2018 ஜூன் 5-ம் தேதி சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து 14 வகை நெகிழிக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ கூடாது எனக் கூறி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி நெகிழி உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிமன்றம் நெகிழிக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என கேள்வி எழுப்பியது. மத்திய சுற்றுச்சூழல் துறை, ரசாயணத்துறையை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசின் இரு துறைகளும் இதுகுறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.