தண்ணீர் லாரிகளை பதிவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
அனைத்து தண்ணீர் லாரிகளும் உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நங்கநல்லூர், பழவந்தாங்கல் மற்றும் கெளரிவாக்கத்தில் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு மற்றும் விவசாய நிலத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை வணிக நோக்கில் பயன்படுத்துவதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகார்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு முந்தைய விசாரணையின் போது உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், மின் மோட்டர்கள், தண்ணீர் எடுத்து செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அது தொடர்பான விவரங்களை அரசுதாக்கல் செய்யாததால், நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக எல்.சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவர் கேட்கும் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் வழங்கவேண்டும் என்றும், மறுக்கும் ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். சென்னை பெருநகர ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட லாரிகளின் விவரங்களை தாக்கல் செய்யவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீரை எடுத்து விநியோகிக்க உரிமம் பெற்ற லாரிகளின் விவரங்களை தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தண்ணீர் லாரிகள் பதிவு செய்வது கட்டாயம் என அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.