விதிமீறி பேனர் வைப்பது தொடர்வது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
விதிமீறி பேனர் வைப்பது தொடர்வது ஏன் என தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு விதிமீறல் பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடர்வதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராஃபி ராமசாமி தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதமும் ஜூன் மாதமும் விசாரணைக்கு வந்தபோது விதிமீறி பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தலைமை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கலந்து கொண்ட கட்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் விதிகள் மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி விளக்கமளிக்க தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.