“நீட் மசோதாக்கள் நிராகரிப்புக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” - உயர்நீதிமன்றம்
தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களித்து கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் ராஜூ எஸ்.வைத்யா குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்தது தொடர்பாக 2017 செப்டம்பர் மாதம் 22ம் தேதியே தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளரை பதில் மனுத்தாக்கல் செய்யும் படி நீதிபதிகள் உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.