ஜெயலலிதாவுக்கு நினைவில்லம் ! தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவில்லம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் அவர் வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என 2017 ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. அதற்கான அரசாணையை பிறப்பிக்கப்பட்டு வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான ஆய்வு பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் செய்து வந்தன.
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்படாவிட்டாலும், குற்றம் புரிந்துள்ளார் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றும், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளதால் அவரை குற்றவாளியாக கருத வேண்டுமெனவும், அப்படி ஒரு குற்றவாளிக்காக அரசு நிதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் நினைவு இல்லை அமைக்ககூடாது எனவும் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அபராதத்தை வசூலிக்கும் வகையில் ஜெயலலிதாவின் அசையா சொத்துக்களை முடக்க கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.