உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை செப்டம்பர் 18ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாநிலத்தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர், நகராட்சி நிர்வாக செயலாளர் ஹர்மன்திர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட 8 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநிலத் தேர்தல் ஆணையரும் மற்றும் தேர்தல் ஆணையச் செயலாளரும் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.