வல்லநாடு அருகே எவ்வித குவாரியும் இயங்கக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

வல்லநாடு அருகே எவ்வித குவாரியும் இயங்கக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

வல்லநாடு அருகே எவ்வித குவாரியும் இயங்கக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

தூத்துக்குடி வல்லநாடு வனஉயிரன சரணாலய எல்லையிலிருந்து 10கி.மீ சுற்றளவில் எவ்வித குவாரியும் இயங்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,“மத்திய சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை பருவ மாறுபாடு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இயங்கும் அனைத்து குவாரிகளும் தேசிய வன விலங்கு வாரியத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.ஆனால், திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தினரும், தூத்துக்குடி கட்டாளங்குளம் பகுதியில் சண்முகவேல் என்பவரும், தூத்துக்குடி புதுக்கோட்டையில் முருகன் என்பவரும், குருஸ்புரம் பகுதியில் சுதர்சன் என்பவரும், விஜய் என்பவரும், சென்னை மந்தவெளி பாக்கத்தில் கதிர் காமராஜ் என்பவரும் விதிகளை மீறி குவாரிகளை நடத்தி வருகின்றனர்.

வல்லநாடு வன உயிரின சரணாலயத்தில் அரிய வகை மான்கள் உள்ளன.இந்த சரணாலயத்தின் 10கி.மீ தொலைவிற்குள்ளே பல குவாரிகள் தேசிய வன விலங்கு வாரியத்தின் முன் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. இதற்கு பல அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வல்லநாடு பகுதியில், தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக்குழுவிடம் முன் அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகளுக்கு தடை விதிப்பதோடு, வல்லநாடு சுற்றுச்சூழல் பகுதியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு,தூத்துக்குடி வல்லநாடு வன உயிரன சரணாலய எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் எவ்வித  குவாரியும் இயங்கக்கூடாது. அனுமதி பெற்றிருப்பின், அதனை தற்காலிகமாக ரத்து செய்ய உத்தரவிட்டனர்.மேலும், சரணாலய பகுதிக்குள் மற்றும் சரணாலயத்தை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேசிய வனவிலங்கு வாரிய தலைவர் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com