தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாதவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜூனன் உட்பட 7 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் "தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டிக் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.  ஆனால் சிபிஐ இதுவரை காவல்துறையினர், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கில் 8.10.2018-ல் மீண்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அதில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி நாங்கள் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்யாதது உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு செய்வதாகும்.

இது தொடர்பாக சிபிஐ இணை இயக்குனருக்கு 12.10.2018-ல் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினோம். அதன் பிறகும் நீதிமன்ற உத்தரவுபடி எங்களின் புகாரின் பேரில் காவல்துறையினர், அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் சிபிஐ இணை இயக்குனர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்பட குறிப்பிட்ட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பெயர் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றார். அந்த இடங்களில் அடையாளம் தெரியாதவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com