மேலவளவு கொலை வழக்கு: விடுதலையான 13 பேருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ்
மேலவளவு கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான 13 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
கடந்த 1996-ஆம் ஆண்டு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முருகேசன் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட ஏழு பேர் 1997-ல் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. ஏற்கனவே இவ்வழக்கில் 3 பேர் முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
13 பேரின் விடுதலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 13 பேர் விடுதலைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, மேலவளவு கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களுக்கு நோட்டீசை கொண்டு சேர்ப்பதை மேலூர் டிஎஸ்பி உறுதி செய்ய வேண்டுமென்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.