\
 “விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கவில்லை”  - நீதிபதிகள் கருத்து 

 “விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கவில்லை”  - நீதிபதிகள் கருத்து 

 “விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கவில்லை”  - நீதிபதிகள் கருத்து 
Published on

சட்டவிரோத பேனர் வழக்கில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து தாமாகவே முன் வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று கண்டனம் தெரிவித்தது.

மேலும் இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர். 

அவர்களிடம் பேனர் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுநர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு விதிமீறி பேனர் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீத்பதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை என நீதிபதிகள் விமர்சித்தனர். உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா? ஏதாவது நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் காவு கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்கமாட்டோம் என உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com