"வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் வர வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

"வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் வர வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
"வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் வர வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது? எங்கு வைக்கப்பட்டுள்ளது? எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?  என்பது குறித்த விபரங்களை வழக்கு எண்ணுடன் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. 
பள்ளிக்கு அருகே கஞ்சா விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், "கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், 50 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டால் அந்த வழக்கு போதைத்தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கும், அதற்கு கீழான வழக்குகள் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டும் விசாரிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, முன்பு 20 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டாலே, அந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது 50 கிலோ என அதிகரித்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு போதுமான அளவு காவல்துறையினரை நியமிக்கவேண்டும். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினர் பலர் பொறியியல் பட்டதாரிகளாக உள்ளனர். அவர்களை இதுபோன்ற சிறப்புப் பிரிவுகளுக்கு பணியமர்த்துகையில், நவீன தொழில்நுட்பம் குறித்து அறிந்திருப்பதால் விரைவாக குற்றவாளிகளையும் அதன் நெட்வொர்க்குகளையும் பிடிக்க ஏதுவாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், போதைப் பொருட்கள் குறித்து அறிந்து அவற்றை அழிப்பது முக்கியம். போதைப் பொருட்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் பெரும்பாலும் குறையும். அது அரசுக்கு நல்லது. ஆகவே போதைப் பொருள் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய இரு பிரிவுகளுக்கும் குறைந்தபட்சம் தலா 100 காவல்துறையினரை கூடுதலாக வழங்க வேண்டும். இரு பிரிவுகளிலும் ஆண்டுக்கு 100 வழக்குகளே பதிவு செய்யப்படுகின்றன. இன்றைய சூழலில் ஊழலின் ஆழம் அதிகம் இருக்கும் நிலையில், லஞ்சம் வாங்க யாருக்கும் அச்சம் இருப்பதில்லை. வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் லஞ்சம் பெறுவது போன்ற தவறுகள் தவிர்க்கப்படும்.
தற்போது gpay போன்ற செயலிகளை பயன்படுத்தியும் லஞ்சம் வாங்குவதாக தெரியவருகிறது. அதோடு போதைப் பொருள் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய துறைகள் என தெரிவித்தார். தொடர்ந்து, போதைத்தடுப்புப் பிரிவு காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் 50 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்படும் வழக்குகளே போதை தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்படும் என்பது இதன் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும்" எனத் தெரிவித்தார்.
அப்போது மீண்டும் அரசு தரப்பில், "போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களில் போதைப்பொருள் தடுப்பு மண்டல அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "போதை தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவுகளில் காவல்துறையினருக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு முன்வர வேண்டும். போதைப் பொருட்களால் ஏராளமான மாணவர்களின் வாழ்வும், அவர்களின் எதிர்காலமும் சீரழிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், " பல இடங்களில் காவல்துறையினரே பிடிபடும் கஞ்சாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மறைத்துக்கொண்டு, அப்பாவிகள் மீது அவ்வப்போது பொய்வழக்கு பதிவுசெய்து கணக்கு காண்பிக்கின்றனர். காவல்துறையினரே குறிப்பிட்ட அளவு கஞ்சாவை பதுக்கி வைக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, போதை பொருள் தடுப்பு குறித்து அதிக அக்கறை செலுத்தும் அதே வேளையில், நிரபராதிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் நீதிமன்றம் கவனம் செலுத்துகிறது. 2019 ஜனவரி மாதத்திற்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே 
1.தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது?
2. அது எங்கு வைக்கப்பட்டுள்ளது? எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?
3. ஒருவேளை போதை பொருள் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு அந்த கஞ்சா அனுப்பப்பட்டது எனில் அதற்கான உத்தரவின் நகல்.
உள்ளிட்ட விபரங்களை வழக்கு எண்ணுடன் தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கு உத்தரவிட்டனர்.
அதேசமயம் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகளின் அடிப்படையில் எவ்வளவு கஞ்சா, அதுபோல போதை தடுப்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவிற்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது? என்பது தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
பறிமுதல் செய்யப்படும் கஞ்சா எங்கு பாதுகாக்கப்படும்? அது எப்போது, எவ்வாறு அழிக்கப்படும்? என்பது குறித்த விபரங்களையும் செப்டம்பர் 13ஆம் தேதிக்குள்ளாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com