மது அருந்திய மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை நூதன தண்டனை 

மது அருந்திய மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை நூதன தண்டனை 

மது அருந்திய மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை நூதன தண்டனை 
Published on

மது அருந்திவிட்டு வகுப்புகளுக்கு சென்ற கல்லூரி மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நூதன தண்டனை வழங்கியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கலை கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 8 பேர் மீது போதையில் வகுப்புக்கும், கம்ப்யூட்டர் ஆய்வகத்துக்கும் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த குறிப்பிட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் 3-ம் ஆண்டில் அனுமதிக்கவில்லை. 

இதையடுத்து தங்களிடம் கல்வி கட்டணத்தை வாங்கிக்கொண்டு 3-ம் ஆண்டில் வகுப்பில் அனுமதிக்கவில்லை எனவும் எங்களை கல்லூரியில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி 8 மாணவர்களும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். அதே நேரத்தில் 3-ம் ஆண்டிலிருந்து மனுதாரர்களை வெளியே அனுப்பினால் அவர்களுக்கு  பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனுதாரர்கள் தங்களின் தவறை ஏற்கெனவே உணர்ந்துள்ளனர்.

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக இருப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனால் மனுதாரர்கள் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். காமராஜர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மாலை 4 முதல் 6 மணி வரை தமிழில் மது விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தி நினைவிடத்துக்கு வெளியே பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுபடி மனுதாரர்கள் நடந்து கொள்கிறார்களா என்பதை கல்லூரி முதல்வர் உதவிப் பேராசிரியர் ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் மனுதாரர்களின் செயல்பாடு குறித்து கல்லூரி முதல்வரிடம் மறுநாள் அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையை பெற்றதும் மனுதாரர்களிடம் உரிய கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு  3-ம் ஆண்டு வகுப்பில் கல்லூரி முதல்வர் அனுமதிக்க வேண்டும்.  மனுதாரர்களின் செயல்பாட்டை விருதுநகர் டவுன் காவல் ஆய்வாளரும் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால் மனுதாரர்கள் மீது கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவை செயல்படுத்த கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள், கல்லூரி முதல்வர் ஆகஸ்ட் 19-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

பிரச்சார பதாகைகளில் இடம்பெற வேண்டிய வாசகங்களாய் குறிப்பிடப்பட்டுள்ளவை.

● மதுவை மறந்து விடு - மனிதனாய் வாழ்ந்து விடு
● மது அருந்தாதே - மாரியாதை இழக்காதே
● குடியை மறந்து விடு - குடும்பத்தை வாழவிடு
● குடிப்பதை நிறுத்திவிட்டு குடிப்பவன் நட்பை ஒதுக்கிவிடு
● கோபுரத்தில் இருப்பவனை குப்பைத்தொட்டிக்கு கொண்டுவரும் - மது
● மதுக்கடையில் இருப்பவனை சாக்கடைக்கு கொண்டு வரும் - மது
● குடித்தால் - குடல் புண்ணாகும் : உன் உடல் மண்ணாகும்: குடும்பம் என்னாகும்?
● மாணவனே விழித்துவிடு மதுவை ஒழித்துவிடு 
● மதுவைத் தவிர்ப்போம் - மக்களைக் காப்போம்
● மது மயக்கும் ! மானத்தை வாங்கும்!
● மது குடிக்கும் மாணவன்! நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு!
● மாணவனுக்கு மது எதற்கு?
● தமிழனின் உயிர் மானமே ! அதனை குடித்து அழிக்காதே! 
● மதுவுக்கு மயங்காதே! மானத்தை இழக்காதே!
● மதுவை மற! பெற்றோரை நினை!
● பாரில் சிறக்க பார்(bar) வேண்டாமே! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com