படிப்பை பாருங்கள்! பிறகு திருமணம் குறித்து யோசியுங்கள்! - இளம்பெண்ணுக்கு நீதிமன்றம் அட்வைஸ்

படிப்பை பாருங்கள்! பிறகு திருமணம் குறித்து யோசியுங்கள்! - இளம்பெண்ணுக்கு நீதிமன்றம் அட்வைஸ்
படிப்பை பாருங்கள்! பிறகு திருமணம் குறித்து யோசியுங்கள்! - இளம்பெண்ணுக்கு நீதிமன்றம் அட்வைஸ்

இளைஞருக்கு 21 வயது ஆகவில்லை என்பதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் குறித்து முடிவெடுக்கவும், அதற்குள் மாணவி விடுதியில் தங்கி கல்லூரி படிப்பை முடிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த குமார் தனது மகள் பேபிகலாவை மீட்டு ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. அப்போது குமார், "மகள் தற்போதுதான் 18 வயதை அடைந்திருக்கும் நிலையில் திருமணம் செய்வதற்கு முன்பாக அவரது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மகள் பேபிகலாவிடம் கேட்டபோது "தானும் இன்ப சத்தியா என்பவரும் காதலிக்கிறோம். படிப்பை தொடர விருப்பம் இருக்கிறது. ஆனால் தனது தந்தையுடன் போக விருப்பம் இல்லை" எனத் தெரிவித்தார். 

இதையடுத்து இளைஞர் இன்ப சத்யா கூறும்போது, "நான் ஓட்டுநராக பணிபுரிகிறேன். எனது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். பேபிகலாவை தொடர்ந்து படிக்க வைக்கிறேன். அதுவரை பேபிகலா விடுதியில் இருந்து படிக்கட்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவை எடுப்பதற்கு சம்மதம்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து “பேபிகலா பதினெட்டு வயது நிரம்பியவர் என்பதால் அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட இயலாது. ஆனால் அவர் காதலிப்பதாக கூறும் இன்ப சத்யா 19 வயது நிரம்பியவர். சட்டப்படி ஆண் 21 வயதிலேயே திருமணம் செய்ய இயலும் என்பதால், பேபி கலா அதுவரை இரண்டு ஆண்டுகள் விடுதியில் தங்கி கல்லூரி படிப்பை முடிக்கட்டும். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து திருமணம் குறித்து முடிவெடுக்கலாம். பேபிகலாவின் தந்தை விரும்பும் பட்சத்தில், அந்த சமயத்தில் இன்ப சத்யாவின் பெற்றோருடன் பேசி திருமணம் செய்துகொடுப்பது குறித்து முடிவெடுக்கலாம்" என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com