மின்சார மீட்டர் கொள்முதலுக்கு உயர் நீதிமன்றம் தடை
மின்சார மீட்டர் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு 163,76,00,000 ரூபாய் செலவில் 28,99,000 மின்மீட்டர்களை கொள்முதல் செய்ய கடந்த ஜனவரி மாதம் டெண்டர் விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைப் பெற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கேபிட்டல் பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் டெண்டர் கேட்டிருந்தது. 13 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், 7 நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டன. ஒரு மீட்டருக்கு 452 ரூபாய் விலை குறிப்பிட்ட தங்களுக்கு டெண்டர் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
டெண்டர் நிராகரிக்கப்பட்டதை தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், கூடுதல் விலை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற புகாரையும் கேபிடல் பவர் சிஸ்டம்ஸ் தனது மனுவில் கூறியிருந்தது. தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்ததாலேயே டெண்டர் மறுக்கப்பட்டது என்று மின்பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோ வாதிட்டது.
விண்ணப்பித்தவருக்குத் தெரியாமல் டெண்டரை இறுதி செய்ததில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மின்சார மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்குத் தடை விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக டான்ஜெட்கோ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.