தமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை
தமிழக பொதுப்பணித் துறைக்கு ரூ2 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவகர்லால் சண்முகம் கடந்த 2015-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், சென்னை அடையாறு, கூவம் ஆற்றிலும் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுகிறது. இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், அடையார் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்ற நிலையில் உள்ளதாகவும் தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்த நீதிபதிகள் அடுத்த 15 நாட்களுக்குள் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தொகையை கட்ட வேண்டும் என்று ஆணையிட்டனர்.
இதையடுத்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக பொதுப்பணித் துறைக்கு ரூ2 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.