பேனர் விவகாரம் : மாநகராட்சி நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் என்ற சென்னை மாநகராட்சி நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்ததை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி டிஜிட்டல் பேனர் அச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாநகராட்சி, செப்டம்பர் 19ஆம் தேதி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி மெகா டிஜிட்டல் உரிமையாளர்களில் ஒருவரான எஸ்.பஷீர் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், டிஜிட்டல் பேனர்களை தடை செய்தோ, பிரிண்டிங் பிரஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கவோ உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் இந்த அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பேனர் அச்சடிக்கும் தங்களால், அது எங்கு வைக்கப்பட வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியாது என்றும், யார் விதிகளை மீறி பேனர் வைத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கோபத்தை காட்டக்கூடாது என்று மனுவில் கூறியுள்ளார். அதனடிப்படையில் தங்கள் தொழிலில் மாநகராட்சி அதிகாரிகள் தலையிடுவதை தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஞானதேசிகன், யார் ஆர்டர் கொடுக்கிறார்கள், எதற்காக அடிக்கிறார்கள் எங்கு வைக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் கேட்ட பின்பே நாங்கள் பேனர் அடிப்பதற்கான ஆர்டரை பெறுவோம் என்று உறுதியளித்தார்.
டிஜிட்டல் பேனர்கள் தயாரிப்பது குற்றமல்ல. சட்டவிரோதமாக வைப்பது தான் குற்றம் என்று தெரிவித்த நீதிபதிகள், பேனர் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை அக்டோபர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.