கோடை வெயிலின் உக்கிரம் தணிக்க மெரினா கடற்கரை வரும் மக்களை நேர கட்டுப்பாட்டை காரணம் காட்டி காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என மனுதாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கோடை வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டி உக்கிரம் காட்டும் நிலையில், வெப்பம் தணிக்க மக்களுக்கு கடவுள் கொடுத்த கொடையாக உள்ள மெரினா கடற்கரையில் மக்கள் குழுமுகின்றனர்.
ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்க கூடாது எனக் கூறி காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்துகின்றனர். காங்கிரீட் காடாகிப் போன சென்னை நகரத்தில், உயர்ந்த கட்டடங்களால் வெப்பத்தின் அளவு பல மடங்கு அதிகரிப்பதுடன், தென்றல் காற்று நகருக்குள் வீச முடியாத நிலையும் உள்ளது.
கடைகள், ஹோட்டல்கள் 24 மணி நேரமும் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாறவும் அனுமதித்துள்ள அரசு, வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது. இதை தடுத்து, கடற்கரைக்கு வரும் மக்கள் இரவு 10 மணிக்கு மேலும் அங்கிருக்க அனுமதிக்கவேண்டும். அவர்களை துன்புறுத்த கூடாது என காவல் துறையினருக்கு அறிவுறுத்தவும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, “மெரினா செல்பவர்களை காவல் துறையினர் எப்படி துன்புறுத்துகின்றனர்? என்ன ஆதாரம் உள்ளது?” எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது.