செய்திச்சேனல்களுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !

செய்திச்சேனல்களுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
செய்திச்சேனல்களுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !

செய்திகளை போட்டி போட்டு பிரேக்கிங் நியூஸ் என தருவதால் மக்களின் கவனம் சீரியல்களிலிருந்து செய்தி சேனல்களை நோக்கி திரும்பியுள்ளது என மதுரைக்கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தனியார் மற்றும் அரசின் தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டண விதிமுறைகளை டிராய் சமீபத்தில் மாற்றம் செய்தது. அதன்படி வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என டிராய் உத்தரவிட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு நன்மை தரக்கூடியதாகவும், தாங்கள் விரும்பும் சேனல்களை மட்டும் காண சுதந்திரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சுரண்டி கட்டாயபடுத்தி கொள்ளையடிப்பது நிறுத்தபட்டுள்ளது. 

மேலும் டிராய்யின் புதிய விதிமுறை உத்தரவுகள் பிப்ரவரி 1ல் இருந்து நடைமுறையில் உள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பணம் கொடுத்து விரும்பிய சேனல்களை பார்க்கும் போது தொலைக்காட்சி நிறுவனங்கள் வியாபார நோக்கில் பொய்யான பல விளம்பரங்கள்ளை ஒளிபரப்பு செய்கின்றனர். இது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு எதிராகவும்,இயற்கை நீதிக்கு எதிராகவும் உள்ளது. செய்தி சேனல்கள் அரசியல், பெரும் விபத்து,கலவரங்கள் என பல முக்கியமான செய்திகளை ஒளிபரப்பு செய்யும் போது ஸ்கிரால்,டிக்கர் என அதிகளவில் திரையை மறைத்து ஒளிபரப்பாகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் டிராய் விதிகளுக்கு எதிராகவும் உள்ளது. இதுகுறித்து ஜனவரி 29 ல் டிராய்க்கு மனு அனுப்பியுள்ளேன். எனவே தனியார் கட்டண சேனல்களில் விளம்பரங்கள் வெளியிட இடைகால தடைவிதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்தியாவில் உள்ள 874 சேனல்களில் 125 சேனல்கள் விதிகளை மீறியதாக டிராயே அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு விதிகளை மீறிய சேனல்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தொலைக்காட்சி செய்திச்சேனல்கள் செய்திகளை போட்டி போட்டு பிரேக்கிங் நியூஸ் என தருவதால் மக்களின் கவனம் சீரியல்களிலிருந்து செய்தி சேனல்களை நோக்கி திரும்பியுள்ளது. இதனால் மக்களின் மனங்கள் மாசுபடாமல் இருக்க துணையாக அமைகிறது. இது பாராட்டப்பட வேண்டியது என தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக  டிராய், மத்திய ஒளிபரப்புத்துறை செயலர், தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com