இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்: தமிழருவி மணியன்

இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்: தமிழருவி மணியன்

இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்: தமிழருவி மணியன்
Published on

‘கட்சி தொடங்கப்போவதில்லை’ என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்த நிலையில், இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என தமிழருவி மணியன் இன்று அறிவித்தார்.

வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் முன்னர் அறிவித்திருந்த நிலையில் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி ‘இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை’ என நேற்று அறிவித்தார். முன்னதாக அவர் கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்த நாளிலேயே, தமிழருவி மணியனை தனது கட்சியின் மேற்பார்வையாளராக நடிகர் ரஜினிகாந்த் நியமனம் செய்தார்.

இந்நிலையில் ‘கட்சி தொடங்கப்போவதில்லை’ என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்த நிலையில், இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என தமிழருவி மணியன் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன.

அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை.

நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்கவேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம். இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது.

எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன்.

இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com