கிருஷ்ணகிரி: தீயசக்தி இருப்பதாக கருதி ஊரை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறிய மக்கள்! நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி அருகே இருக்கும் ஒப்பலகட்டு கிராமத்தில் இளம் வயதினர்களின் மரணம் தொடர்ந்து நிகழ்ந்துவருவதால், கிராமத்தில் தீய சக்தி புகுந்துவிட்டதாக ஊரையே காலி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரைவிட்டு வெளியேறிய மக்கள்
ஊரைவிட்டு வெளியேறிய மக்கள்PT

ஊரை விட்டு வெளியேறி ஆற்றங்கரையில் தங்கிய மக்கள்!

கிருஷ்ணகிரியில் கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒப்பலகட்டு கிராமத்தில், சிறார் மற்றும் இளம் வயதினரின் தொடர் மரணத்தால் கிராம மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். மேலும் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டும் வந்துள்ளனர். இதனால் தங்களை தாங்களே காப்பாற்ற ஒன்றுகூடி முடிவு செய்த ஊர் மக்கள், மொத்த ஊரையும் காலி செய்து ஊர் எல்லைத் தாண்டி ஒருநாள் வனவாசம் செல்ல முடிவெடுத்துள்ளனர். வனவாசத்துக்குப்பிறகு ஊருக்கு வெளியில் சென்று தோப்பில் குடியேறி, தங்கள் கிராமத்தில் புகுந்துள்ள காத்து கருப்புகளை விரட்ட முடிவு செய்துள்ளனர்.

கூளியம் கிராம மக்கள்
கூளியம் கிராம மக்கள்PT

அதன்படி ஒருநாள் அதிகாலையில் ஊரில் இருந்து வெளியேறிய மக்கள், கிராமத்திற்குள் யாரும் சென்றுவிடாமல் இருக்க எல்லைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போட்டுள்ளனர். குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவரும் வெளியேறியுள்ளனர். மேலும் ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் தொடங்கி தங்கள் கிராமத்தை காத்துவந்த கிராம தெய்வங்களின் சிலைகள் வரை அனைத்தையும் அழைத்துக்கொண்டு வெளியேறி உள்ளனர் மக்கள். ஒட்டுமொத்தமாக அனைவரும் கிராம எல்லையை தான்டி தென்பெண்ணை ஆற்றின்கரையோரம் குடிபுகுந்தனர்.

தீய சக்திகளை ஊரிலிருந்து விரட்டவே இந்த நடவடிக்கை!

பகல் முழுவதும் அங்கேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்ட கிராம மக்கள் அங்குள்ள வன தேவதையை வழிப்பட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பிறகு ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி ரமேஷ் மற்றும் ஊர்பெரியவர்களான மூக்ராஜ், ரமேஷ் ஆகியோரின் தலைமையில் மண்டு மாரியம்மன், முத்துமாரியம்மன், செல்லி மாரியம்மன் ஆகிய கிராம தெய்வங்கள் முன்னேறி செல்ல, அவர்களை தொடர்ந்து தாங்களும் தங்கள் கால்நடைகளுடன் கிராமத்துக்குள் சென்றனர். அப்போது ஊர் எல்லைகளில் ஆடுகளை பலியிட்டு பூஜைகள் செய்தபின் அனைவரும் தங்களது வீடுகள் முன்பாக கற்பூரத்தினை ஏற்றிவைத்துவிட்டு அவரவர் வீடுகளுக்குள் சென்றனர்.

இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், “21 ஆண்டுகளுக்கு பிறகு ஊரில் பல்வேறு மரண சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருகின்றன. கிரமாத்தில் காத்து கருப்பு போன்ற தீயசக்திகள் புகுந்துள்ளதால்தான், இந்த மரணங்கள் நடத்துள்ளதாக தெரிகிறது. இந்த காத்து கருப்பை கிராமத்தைவிட்டு விரட்டவே ஊரில் எந்த ஜீவராசிகளும் இல்லாமல் ஊரை காலி செய்து ஊர் எல்லையை தாண்டி குடிபெயர்தல் நடைபெறுகிறது. நாங்கள் அனைவரும் கிராமத்தை காலி செய்தால் அந்த காத்து கருப்பு கிராமத்தை விட்டு சென்றுவிடும் என்ற நம்பிக்கை அடிப்படையில் செய்தோம்” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com