“இனி பேனர் வைக்க மாட்டோம்” - உறுதிமொழியெடுத்த அஜித் ரசிகர்கள்
சுபஸ்ரீ உயிரிழப்பின் எதிரொலியாக இனி எந்த நிகழ்விலும் பேனர் வைக்க மாட்டோம் என மதுரை அஜித் ரசிகர்கள் உறுதிமொழியெடுத்துள்ளனர்.
மதுரை அஜித் ரசிகர்கள் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் சுவரோட்டிகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. அதில், “சாலைகளின் பேனர் கவிழ்ந்து சுபஸ்ரீ என்கின்ற சகோதரியின் இழப்பு மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னால் நாம் சிந்தித்து செயல்பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்தி இருக்கின்றது. இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அஜித் படங்களுக்கு அவர் புகழை பரப்பு விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கின்றோம்” என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சுபஸ்ரீயின் மரணத்திற்கு பிறகு பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

